பண்ணைகளில், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிக் குஞ்சுகள் அனைத்தும் பேடுகளாக வளரவேண்டும். இல்லையேல் பண்ணைக்காரருக்கு பெரு நஷ்டம் ஏற்படும்.
Broiler எனப்படும் கறிக்கோழி இனங்கள் வேறு, Layer என அழைக்கப்படும் முட்டையிடும் கோழி இனங்கள் வேறு. கறிக்கோழி வளர்ப்பில் சேவலாக இருந்தாலென்ன பேடாக இருந்தாலென்ன சதை வளர்ச்சிதான் முக்கியம். இவை ஊழைச் சதை வைப்பதற்கென்றே இன விருத்தி செய்யப்பட்டவை. நாற்பந்தைந்து நாட்களின் பின் கறிக் கோழிகள் வெட்டப்பட்டு சந்தைக்கு வந்துவிடும். உடனே சட்டிக்குள் போனவை தவிர்ந்த, மற்றைய கறிக் கோழிகளிகள், உறை குளிர்ப் பெட்டிகளில்தான் மிகுதி வாழ்க்கையை நடத்தும்!
முட்டைக்காக கோழிப் பண்ணை வைக்க விரும்பும் ஒருவர் அதிக பட்ஷம் ஐந்து நாள் கோழிக் குஞ்சுகளையே வாங்கி பண்ணையை ஆரம்பிப்பார். இவற்றுள் பெரும்பாலான குஞ்சுகள் வளர்ந்து சேவல்களானால் நிலமை என்ன? பண்ணைக்காரர் திவாலாகிவிடுவார். சேவலோ, பேடோ, முட்டையிடும் கோழி இனங்களில் சதை வளர்ச்சி இருக்காது. இதனால் முட்டை இடும் இனச் சேவல்களை இறைச்சிக்காக விற்பதும் ஆதாயம் தராது.
ஆடுகள், மாடுகள், மனிதர்கள் உள்ளடங்கிய பாலூட்டிகளில் ஆண்குறி, பெண்குறி ஆகியன வெகு துலக்கமாக இருக்கும். பிறந்தவுடன் இனம் பிரித்துவிடலாம். ஆனால் பறவை இனங்களில் அப்படியல்ல.
பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதும் துவாரத்தை விஞ்ஞானத்தில் ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) என்பார்கள். இதனூடாக, முட்டை, கழிவு ஆகியன வெளியேறலும் புணர்ச்சியும் நடைபெறும்;. இதன் காரணமாகவே முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, கோழியின் குடல் வழியாக முட்டை வருவதாக பலர் நம்புகிறார்கள். கோழியில், புணர்ச்சிக் கழிவு பொதுவாயின் உட்பகுதியில் மிகச் சிறிய ஆண், பெண் பால் உறுப்புக்கள் இருக்கும். பொது வாய்க்குள் சுருண்டிருக்கும் ஆண்குறி, புணர்ச்சியின்போது மட்டும் வெளிவரும்.
இதன் பின்னணியில். ஆண்குறி வெளியே தெரியாத நிலையில், குஞ்சுகளில் சேவலை இனங்காண்பது எப்படி? என்ற கேள்வி முட்டைக்கான கோழி வளர்ப்பில் முக்கியமானது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில், பேட்டின் சூலகத்திலிருந்து வெளியேறும் கருக்கட்டாத முட்டையிலும், சேவல் கோழியின் விந்திலும் குறியீட்டு அடையாளத்தை (Marker) செலுத்தி, பொரிக்கும் குஞ்சுகளின் நிறத்திலிருந்து பால் வேறுபாட்டை அறிந்து கொள்வார்கள். இதன் காரணமாகவே பண்ணைகளில் முட்டையிடும் பேடுகள் எல்லாம் ஒரே நிறத்திலிருப்பது. இந்த தொழில் நுட்பத்தை நடைமுறைப்படுத்த அறிவியல் அறிவும் விஞ்ஞான உபகரணங்களும் தேவை.
இதனால் இது ஒரு சாமானியனுக்கு தோதுப்படாத விஷயம்.
எனவே நமக்கேற்ற இலகுவான முறை என்ன?
குஞ்சுகளின் செட்டையிலிருந்து (Wing) இனங்காண்பது!
பறவைகளில் ‘கை போன்று’ காணப்படும் செட்டை (Wing) இறகுளாலும் (Primaries)> மெல்லிறகுகளாலும் (Coverts) ஆனவை. இரு இறகுகளுக்கு இடையே ஒரு மெல்லிறகு இருக்கும். குஞ்சுகளின் மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க கட்டையாக இருந்தால் அது பேடு. மெல்லிறகு, இறகுகளிலும் பார்க்க நீளமாக அல்லது ஒரே அளவாக இருந்தால், அவை சேவலாக வளரும். இந்த முறை மூலம் முட்டைக்கான கோழிவளர்ப்புப் பண்ணைகளில் சேவல்களை இனங்கண்டு குஞ்சுப் பருவத்திலேயே அவற்றை அழித்து விடுவார்கள்.
இப் பிரச்சனை, யாழ்ப்பாணத்து மக்களாலே கற்பகதரு எனப் போற்றப்படும் பனை மர வளர்ப்பிலும் அரேபியர்களின் அக்ஷய பாத்திரமாக கருதப்படும் பேரீச்சை மர வளர்ப்பிலும் உண்டு. இங்கும் ஆண், பெண் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் கமுகு, தென்னை மரங்களில் அப்படியல்ல. இவற்றில் ஆண்பூவும் பெண்பூவும் ஒரே மரத்தில், ஒரே பாளையில் இருக்கும். இவற்றின் பாளைக் காம்பில், ஒரு பெண் பூ அடிப் பக்கத்திலும், அதைத் தொடர்ந்து பல ஆண் பூக்கள் காம்பின் நுனிவரையும் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் பின் ஆண்பூக்கள் உதிர்ந்துவிட, பெண் பூ கருக்கட்டி குரும்பட்டியாகும். ஆனால் பனை, பேரீச்சை மரங்களைப் பொறுத்தவரையில், மகரந்த மணிகளை மாத்திரம் கொண்ட ஆண் பூக்கள் ஆண் மரத்திலும், சூலகத்தைக் கொண்ட பெண் பூக்கள் பெண் மரத்திலும் இருக்கும்.
பனை, தென்னை, கமுக மரங்கள் குட்டி போடாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வாழை மரம் குட்டி போடுவது போல பேரீச்சை மரமும் குட்டிபோடும். இங்கு ஆண் மரத்தின் குட்டிகள் ஆண் பேரீச்சை மரமாக வளரும். பெண் மரத்தின் குட்டிகள் அதன் மரபணு அமைப்பின் படி பெண் பேரீச்சை மரங்களாக வளரும். ஆனால் பெருந்தோட்டங்களை ஸ்தாபிப்பதற்கு தேவையான பெரும் எண்ணிக்கையிலான பெண் பேரீச்சை மரக் குட்டிகளை, இந்த முறையில் பெறுவது கஷ்டம். அத்துடன் குட்டிகள் பெரிதும் சிறிதுமாக இருக்குமாதலால் ஒரே சீரான மரங்களை பெருந்தோட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
பனை, பேரீச்சை மரங்கள் பெரும்பாலும் விதைகளின் மூலமே உருவாகின்றன. விதைக் கன்றுகளுள் ஆண் எது? பெண் எது? என்று கண்டுபிடிப்பது கடினம். இவை வளர்ந்து காய்க்கும் போதுதான் இவற்றின் பாலின வேறுபாட்டை அறியமுடியும்.
அரேபிய பிரதேசங்களில் பேரீச்சை மரங்களிலுள்ள ஆண் பெண் பேதம் தற்போது பாரிய தலையிடியாய் உருவெடுத்துள்ளது. பேரீச்சை மர பெரும் தோட்டங்களை உருவாக்க, விதைக் கன்றுகளை நடும்போது நட்ட மரங்களுள் ஐம்பது சதவீதம் ஆண் மரங்களாக வளருவது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆண் பேரீச்சை மரங்கள் மகரந்தச் சேர்க்கை தவிர்ந்த வேறு எதற்கும் பயன்படாதவை. நமது ஊர்ப் பனை மர வளர்ப்பில் இந்தப் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. நூறு பனைகள் கொண்ட ஒரு பனைங்கூடலில் இரண்டு அல்லது மூன்று ஆண் பனைகளையே எனது அநுபவத்தில் கண்டிருக்கிறேன். இருப்பினும் நம்மூர்ப் பனைங் கூடலில் ஐம்பது சதவீத பனைகள் ஆண்பனைகளாக இருப்பின் நிலமை எப்படி இருக்கும்? அப்படி இருந்தாலும் பேரீச்சை போலல்லாது ஆண் பனைகளில், மகரந்த மணிகளைத் தவிர, ஓலை, கள்ளு, மரம் என வேறு பல பயன்களும் உண்டு.
கோழிகளில் குஞ்சுப் பருவத்தில் சேவல்களை இனம் காண்பதுபோல பனையிலும் பேரீச்சையிலும் விதைக்கன்றுப் பருவத்தில், ஆண் மரங்களை இனம் காணும் தொழில் நுட்பம் இன்னமும் விருத்தி செய்யப்படவில்லை.
எனவே ஒரே சீரான ஒத்த இயல்புடைய பெருமளவு பெண் பேரீச்சை மற்றும் பெண் பனை மரக் கன்றுகளை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதற்கு ஒரேயொரு வழி முறை தான் உண்டு.
அது இழைய வளர்ப்பு முறை!
இந்த முறையில் பெண்மரத்தின் இழையத்திலிருந்து பல ஆயிரம் கன்றுகளை, தாவர ஹோர்மோன்களின் உதவியுடன் வளர்த்தெடுக்கலாம். இந்த தொழில் நுட்பம் பேரீச்சையில் தற்பொழுது வெற்றிகரமாகக் கையாளப்படுகிறது.
எனவே பனைமரத்துக்கான இழைய வளர்ப்பு தொழில் நுட்பமும் குட்டைப் பனைகளை உருவாக்கும் இனவிருத்தி ஆராச்சியும் முன்னெடுக்க வேண்டியது அவசரமும் அவசியமும் என்பதே, நான் இந்தக் கட்டுரைமூலம் விடுக்கும் வேண்டுகோளாகும்.


No comments:
Post a Comment